நட்டத்தை நிறுத்த விசில் அடியுங்கள்!

நட்டத்தை நிறுத்த விசில் அடியுங்கள்!
Published on

சமீபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை எதிர்கொண்ட தமிழக அரசு அதை ஒரு வழியாக சமாளித்து முடித்த கையுடன் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

கடந்த ஆறு ஆண்டுகளில் டீசல் விலை உயர்ந்தபோதும் கூட பேருந்து கட்டணங்களை உயர்த்தும் துணிச்சல் யாருக்கும் வந்திருக்கவில்லை. எப்போதுமே இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயமாக அரசுகளால் பார்க்கப்படும். ஏனெனில் இது நேரடியாக மக்களைப் பாதிக்கும் விஷயம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இன்று இருக்கும் பரிதாபகரமான நிலையில் கட்டண உயர்வை தவிர்க்க முடியாததாக அரசு முன்வைத்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் மொத்தமாகச் சேர்ந்துள்ள  இழப்பு: 16,145 கோடி ( போக்குவரத்துக் கழகங்களின்சொத்து மதிப்பே 10.178 கோடிதான்) என்று தணிக்கைத் துறை ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இவற்றின் சொத்துகள் அனைத்துமே வங்கிகளில் அடகு வைக்கப்பட்டு கடன் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 22500 பேருந்துகள் ஓடுகின்றன. எட்டு போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. இதில் நகர்ப்பேருந்துகள் மட்டும் 12000. சுமார் 8500 பேருந்துகள் புறநகர்ப் பேருந்துகள். மீதி ஸ்பேர் பஸ். தினமும் சுமார் ஒரு கோடி கிமீ இயக்குகிறார்கள். 500 பேர் உள்ள கிராமத்துக்கும் பஸ் வசதி.  2.25 கோடிப்பேர் பயணம் செய்கிறார்கள். ஒருகோடியே எண்பது லட்சம் பேர் நகரப்பேருந்துகளில் பயணிக்கிறார்கள். சுமார் 40 லட்சம் பேர் புறநகர்ப்பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். சென்னையில் மட்டும் 50 லட்சம் பேர் தினமும் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். நாட்டிலேயே அதிகமாக மக்கள் பயணிப்பதில் முதலிடத்தில் இருப்பது சென்னை மாநகரக் கழகப் பேருந்துகள்தான். தினமும் 1270 பேர் ஒவ்வொரு பேருந்துக்கும் பயணிக்கிறார்கள் (இது 2015 - 16 நிலவரம்).

இவ்வளவு முக்கியமான ஒரு துறை இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் இயங்குகிறவர்களைக் கேட்டால் அரசு நியாயமாக கொடுக்கவேண்டிய இழப்பீடுகளைக் கொடுக்காததால்தான் இந்த நிலை என்கிறார்கள். அரசோ வருவாய்க்கும் இயக்கச்செலவுக்கும் இடையே  மாதம் 9கோடி துண்டு விழுவதாகவும் ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், டீசல் விலை உயர்வு, இடுபொருள் விலைகள் அதிகரிப்பு ஆகியவற்றைக்  காரணம் காட்டுகிறது. டீசல் லிட்டர் சுமார் 40 ரூபாய் விற்றபோது இருந்த கட்டணமே இன்று லிட்டர் 68 ரூபாயாக இருக்கும்போது வைத்திருக்கமுடியுமா என்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியான திமுக சார்பில் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆய்வறிக்கை அரசின் இந்த வாதத்தில் பிழை காண்கிறது. மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான கலால் வரி மற்றும் மாநில அரசின் 25 சதவீத வாட் வரி என்று டீசல் மீது சுமத்தப்படும் வரிச்சுமை மக்கள்மீது சுமத்தப்படுவதாக அது கூறுகிறது. பேருந்துகளுக்கு ஆகும் செலவில் டீசல் செலவு மட்டும் 28.7%. டீசல் மீது 10 சதவீத ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்பட்டால் தமிழகப்பேருந்துகளுக்கு 2017 - 18 காலகட்டத்தில் மட்டும் 1390 கோடி ரூபாய் செலவு குறையும் என்கிறது அந்த அறிக்கை. மூன்று வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளின் வசூல் தொகையை சராசரியாக எடுத்து கணக்கிட்டு ஆய்வு செய்யும் இந்த அறிக்கை, அதன் படி ''எல்லா செலவுகளையும் ஈடு செய்தபின்னர் பெரிய அளவுக்கு லாபம் இல்லை என்றாலும் பெரிய அளவில் நட்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை,'' என்று குறிப்பிடுகிறது.

அத்துடன் கர்நாடக மாநில அரசுப்பேருந்துகள் தமிழகப்பேருந்துகளை விட குறைந்த எரிபொருள் திறனுடன் இயங்குவதாகவும்( ஒரு லிட்டர் டீசலுக்கு 4.8 கிமீ. தமிழக பேருந்துகள் ஒரு லிட்டர் டீசலுக்கு 5.25 கிமீ), ஆனால் அம்மாநிலக் கழகம் கடந்த ஆண்டு 1.87 கோடி ரூபாய் நட்டத்தையே சந்தித்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கும் செய்தி முக்கியமானது. அம்மாநில போக்குவரத்துக் கழகத்திடம் 23,829 பேருந்துகள் உள்ளன. நம் மாநில எண்ணிக்கைக்குக் சமமான எண்ணிக்கையே.

ஒரு பக்கம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியப் பலன்களையும்  கழகத்தில் செலவு செய்துவிட்டார்கள் எனப் போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கணக்கில் மெத்தனமாக இருந்ததால் போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலைமை. நிலையைச் சரிசெய்ய அதிரடியான நிர்வாக சீரமைப்புகள் தேவைப்படுகின்றன. கட்டண உயர்வுகள் மட்டும் பலன் தரப்போவது இல்லை!

விபத்துக்களுக்கான இழப்பீடு வழங்குவதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மெத்தனமாகச் செயல்படுகின்றன. ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதால் வட்டி மூலம் விரயம் ஆகிறது.  மார்ச் 2015 வரை உள்ள ஐந்தாண்டுகளில் இப்படி  இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை 4771. இந்த பேருந்துகள் 4.24 லட்சம் தினங்கள் இயங்கியிருக்கவேண்டியவை. அப்படி இயங்காததால் உருவான வருவாய் இழப்பு 213.37 கோடி ரூபாய். அத்துடன் பேருந்துகள் ஜப்தி செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயரையும் ஏற்படுத்துகிறது. ஆனால் அரசு  ஜனவரி 2016&ல் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளுக்குப் பதிலாக மாற்றுப்பேருந்துகளை இயக்கியதாக தெரிவித்தது. எனவே மேற் சொன்ன இழப்பு இல்லை என்று கூறியது. ஆனால் இப்படி மாற்றுப்பேருந்துகள் இயக்கப்பட்டதற்கான எந்த ஆவணச்சான்றும் அரசுப் போக்குவரத்துக்கழகங்களிடம் இல்லை.

 -2015-ஆம் ஆண்டுக்கான மத்திய கணக்காளரின் தணிக்கை அறிக்கை

மார்ச், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com